மாநிலம் சென்னை

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்!

by puthiyavanadmin on | 2024-05-25 13:24:57

Share: | | |


பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்!

ஜாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராகத் திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, ஒற்றை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து  அண்ணாமலை அவதூறு பரப்புவதாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

மாண்புமிகு அம்மா அவர்கள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழ் நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழ் நாட்டை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மாண்புமிகு அம்மா அவர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

புரட்சித்தலைவர் வழியில், "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்- இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையில் பொற்கால ஆட்சி தந்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

மாண்புமிகு அம்மா அவர்கள், தமது ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் 2001ம் ஆண்டு துவக்கப்பட்டது. புதிதாக வக்ஃபு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. வக்ஃபு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

அவரது ஆட்சிக் காலத்தில்தான் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி உறுதியாக இருந்திருக்கிறார். தமிழ் நாடு அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராம் அம்மா அவர்களின் நெடும்புகழ் அவ்வண்ணமே நிலைத்து நிற்கும்.

அண்ணாமலை அவர்கள், தனது சொந்த அரசியல் லாபத்திற்காகவும், தமிழ் நாட்டில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் அம்மா அவர்கள் இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek