மாநிலச் செய்தி கோயம்புத்தூர்

சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வதாக பொய் வேஷம் போடுகிறது திமுக- எடப்பாடியார் குற்றச்சாட்டு

by puthiyavanadmin on | 2023-11-28 21:39:55

Share: | | |


சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வதாக பொய் வேஷம் போடுகிறது திமுக- எடப்பாடியார் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பி.ஜே.பி-யோடு 2001 இல் கூட்டணி அமைத்து, பி.ஜே.பியை கட்சி தமிழக சட்டமன்றத்தில் நுழைவதற்கு முதலில் பாதை அமைத்து தந்தது திமுகதான் இதை மறுக்க முடியுமா? என கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

https://youtube.com/shorts/OmWC9xKwsPU?feature=share

கோவையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

ஒருவர் உழைப்பில் மற்றவர் வாழ்வதும், அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்யும் நிலைமையும் அதிகரித்து விட்டது. தமிழகத்திற்கு நல்லது செய்வோம், உழைப்போம் என்று கூறிக்கொண்டு பொய் வாக்குறுதிகளை, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி, தமிழக மக்களை ஏமாற்றி தந்திரமாக திமுக-வினர் ஆட்சிக்கு வந்தார்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மக்கள் மீது பல்வேறு வரிச் சுமைகளை சுமத்தினர். குறிப்பாக இரண்டு முறை மின் கட்டண உயர்வால் தொழில் நகரமான கோவை, திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஸ்தம்பித்துள்ளதை நீங்கள் அறிவிர்கள். தொழில் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து தொழில் நடத்த முடியாத நிலையில் உள்ளனர் என்பதும் உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

மின் கட்டண உயர்வோடு இந்த திமுக அரசு, சொத்து வரி, வீடு மற்றும் கடை வரி, தொழில் வரி உட்பட அனைத்து வரிகளையும் பல மடங்கு உயர்த்தியதால், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டியுள்ளன. மேலும் வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு விற்பனை வரி அலுவலர்கள் சோதனை என்ற பெயரில் அடிக்கடி பல மடங்கு அபராதம் விதிக்கும் நிலையினை வணிகர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

பதிவு கட்டணம் முதல் அரசின் அனைத்து கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணமான திமுக ஆட்சியாளர்கள், தற்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். தற்போதைய முதல்வர், எதிர்கட்சித் தலைவராக இருந்த போது பச்சை துண்டை தலையில் கட்டி, நானும் ஒரு விவசாயிதான் என்றும், நான் டெல்டாகாரன் என்றும் வசனம் பேசியதும், தொட்டதெற்கெல்லாம் அப்போதைய அம்மா அரசை எதிர்த்து போராட்டம் நடத்தையும் நீங்கள் அறிவீர்கள்.

தற்போது அவர் முதலமைச்சரான பின்னர், திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யூரில் தங்களின் விவசாய நிலம் பறிபோய்விடக் கூடாது என்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் விவசாயிகளை, குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து, விவசாயிகளை அடக்க நினைக்கும் கொடுங்கோல் முதலமைச்சராக அவர் மாறிவிட்டதையும் பொதுமக்களாகிய நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படித்தான் இந்த விடியா திமுக அரசு, சிறுபான்மை மக்களையும், தந்திரமாக ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில், சிறுபான்மை மக்களுக்கு என்ன நன்மை செய்துள்ளது?. உண்மையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் திமுக அரசு முடக்கி வைத்துள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வதாக பொய் வேஷம் போடும் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் சில கேள்விகளை நான் கேட்க விரும்புகிறேன். "உலக வரலாற்றில் எவரும் செய்திடாத திட்டமாக, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கிறிஸ்தவ பெருமக்களின் புனிதத் தலமான ஜெருசலேம் சென்று வர கிறிஸ்தவர்களுக்கு, தமிழக அரசின் மூலம் நிதி உதவி அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் இது வரை ஒரு கிறிஸ்துவரையாவது இந்த திமுக அரசு ஜெருசலம் புனித பயணத்திற்கு அனுப்பியுள்ளதா? சொல்லுங்கள் அனுப்பியுள்ளதா? ஒருவரைக்கூட அனுப்பவில்லையே.

கடந்த கால அம்மா ஆட்சியில், ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கான விமானக் கட்டணம் உயர்ந்து விட்டது என்றும், எனவே ஜெருசலேம் பயணத்திற்காக வழங்கப்படும் மானிய தொகையை உயர்த்தி தரவேண்டும் என்று இது போன்ற ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் அப்போது முதலமைச்சராக இருந்த என்னிடம் மேடையில் கோரிக்கை வைத்தனர். உடனடியாக ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவ யாத்ரீகர்களுக்கு வழங்கப்பட்ட அரசு நிதி உதவி, ஒரு நபருக்கு 28,000/-த்தில் இருந்து 38,000/- ரூபாயாக உயர்த்தி வழங்க அந்த மேடையிலேயே உத்தரவிட்டேன் என்பதை இப்போது நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அரசு மானியம் பெறும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களையும், பணியாளர்களையும் சுதந்திரமாக அந்தந்த கல்வி நிறுவனங்களே எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இந்த திமுக அரசு, ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசு மானியம் பெறும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் புதிதாக ஆசிரியரையோ, பணியாளர்களையோ அரசியல் குறுக்கீடு இன்றி நியமிக்க முடியவில்லை என்பதை நீங்களே நன்கு அறிவீர்கள். மேலும் இந்த திமுக அரசில், அரசு மானியம் பெறும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் பல புதிய நியமனங்கள் அரசின் அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை கிறிஸ்துவ சிறுபான்மை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

"திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார்களே. இது வரை இது அமல்படுத்தப்படாததால், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க வேண்டும் என்று, கடந்த காலங்களில் திமுக, பிஜேபி கட்சியுடன் கூட்டணி அமைத்தது. ஐந்து ஆண்டு காலம் அவர்களோடு இணைந்து பசையான பதவிகளை ஒன்றிய அரசின் அமைச்சரவையில் இடம் பெற்று ஆண்டு அனுபவித்த கட்சிதான் திமுக.

கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரை, பி.ஜே.பி-ன் கொள்கைகள் திமுக-விற்கு தெரியாதா?. பதவி சுகம் வேண்டும் என்றால் கொள்கையை காற்றில் பறக்க விடுபவர்கள்தானே திமுக தலைவர்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் பி.ஜே.பி-யோடு 2001 இல் கூட்டணி அமைத்து, பி.ஜே.பியை கட்சி தமிழக சட்டமன்றத்தில் நுழைவதற்கு முதலில் பாதை அமைத்து தந்தது திமுக. இதை மறுக்க முடியுமா? கடந்த காலத்தில் பி.ஜே.பி கட்சியுடன் திமுக-வினர் ஒட்டி உறவாடி, பதவி சுகத்தை அனுபவித்ததை மக்கள் மறந்து விடுவார்கள் என எண்ணி, பசுந்தோல் போர்த்திய புலியாக வலம் வரும் தந்திரக்கார திமுக-வின் சுய ரூபத்தை சிறுபான்மை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அனைத்து மக்களையும் உண்மையாக, சமமாக மதிக்கின்ற இயக்கம். மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வணங்கி போற்றுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.

குறிப்பாக கிறிஸ்துவ பெருமக்கள், இந்திய தேசத்தின் கல்வி வளர்ச்சியிலும், மருத்துவ சேவையிலும், சமூக அக்கறையிலும், அளப்பரிய சேவை புரிந்துள்ளார்கள். எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அவர்கள் சேவைகளை மதிக்கும் விதமாக அநேக மரியாதையைச் சேர்ந்தது.

உதாரணமாக தன் வாழ்நாளை ஏழை, எளியவர்களின் துயர் துடைப்பதற்காக தன்னை அர்ப்பணித்து, இன்றைக்கு உலகமே போற்றுகின்ற புணிதராக 'திருநிலை' படுத்தப்பட்டு அனைவராலும் வணங்கப்படுகிற தாயாக விளங்குபவர் அன்னை தெரசா. அவர்களை கௌரவிக்கும் விதமாக அன்னை தெரசா பல்கலைக்கழகம் அமைத்தது அதிமுக அரசு.

அதே போல் அம்மா ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையை கட்டி, அதன்மூலம் தென் தமிழக மக்களுக்கு வாழ்வாதாரம் தந்த, கிறிஸ்தவப் பெருமகனார் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களுக்கு மாபெரும் மணிமண்டபம் அமைத்து, அதனை மாண்புமிகு அம்மா அவர்களே நேரில் சென்று திறந்து வைத்து பெருமைப்படுத்தினார். ஆனால் அந்த கர்னல் ஜான் பென்னி குயிக்கை பெருமை படுத்துகிறேன் என்ற பெயரில் லண்டனில் ஒரு சிலையை அமைத்து, அதற்கு உரிய கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் அவரது சிலை அங்கு மூடிக்கிடக்கிற நிலையை உருவாக்கியது தி.மு.க அரசு.

ஜெருசலம் புனித பயணத்திற்கான நிதி உதவி மட்டுமல்ல, பழுதடைந்த தேவாலயங்களை புதுப்பிப்பதற்கான நிதி ஆதாரத்தை உயர்த்தி வழங்கியதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான்.

சிறுபான்மை ஏழை மாணவர்களின் கல்வி உபகார நிதியை, மைனாரிட்டிஸ் ஸ்காலர்ஷிப் முழுமையாக அளித்து மாணவர் நலன் காத்த அரசு, அதிமுக அரசு. இப்படி அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஆனால் திராவிட மாடல் திமுக அரசு. இல்லை, இல்லை தந்திர மாடல் திமுக அரசு செய்த சாதனைகள் என்ன? கூறுங்கள், உண்மையை சொல்ல போனால் கட்சத்தீவின் உரிமையை நாம் முழுவதுமாக இழந்து போனதற்கு மூல காரணம் கருணாநிதி அவர்களின் தலைமையிலான அப்போதைய திமுக அரசு தான் என்பதை காலம் மறக்காது.

திமுகவின் இந்த மக்கள் விரோத செயலால் அதிகம் பாதிப்பிற்குள்ளானது மீனவர்கள் மட்டுமல்ல, தமிழக கிறிஸ்துவ கத்தோலிக்க பெருமக்களும் தான் என்பதை இப்போது புரிந்து கொள்ளுங்கள். எப்படி எனில் திமுக அரசு கச்சத்தீவின் உரிமையை இலங்கைக்கு தாரை வார்த்ததால், இந்தியாவின் கடல் வழி போக்குவரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தற்போது வரை ஆபத்தான சூழ்நிலை உள்ளது. தமிழக மீனவரின் வாழ்வாதாரமாக மீன்பிடி எல்லை உரிமையை பறிபோய் விட்டது.

பாரம்பரியமாக கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் வழிபட்டு வந்த புனித அந்தோனியார் ஆலயம் திருவிழா நடத்துவதற்கான உரிமை பறிக்கப்பட்டு, இன்று நாம் பாதிரியார்கள் மற்றும் பேராயர்கள் இலங்கை அரசின அனுமதிக்காக அவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு அவமானப்படுத்தப் பட்டுள்ளனர். இந்த அவல நிலைக்கு அப்போதைய திமுக அரசு தான் காரணம்என்பது தெளிவு. எனவே கிறிஸ்துவ பெருமக்கள் அனைவரும் இனியும் இந்த தந்திரமான திமுக-வினரிடம் ஏமாறாமல் மிகுந்த கவனத்தோடு, எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் தற்போது உங்களிடம் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையானது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் திமுகவினர் பொய்யை உண்மை போல பேசி, உங்களை நம்ப வைத்து திசை திருப்பி தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதில் மிகவும் திறமைசாலிகள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற இந்த மாபெரும் இயக்கம் எங்களது இரு பெரும் தலைவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வகுத்த கொள்கைகளின் வழியில் என்றும் உறுதியோடு செயல்படும்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek