தேசியம் சென்னை

இந்தியா கூட்டமைப்பு பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றியே தீரும்.

by admin on | 2023-10-15 07:14:17

Share: | | |


இந்தியா கூட்டமைப்பு பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றியே தீரும்.

மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்று தெரியாத நிலையற்ற தன்மையில் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது.

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையிலும், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலையிலும் நடைபெற்ற மாநாட்டில் I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் உள்ள மூத்த பெண் தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரிய சுலே, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெகபூபா முப்தி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுஸ்மிதா தேவ், ஐக்கிய ஜனதா தளம் லேஷி சிங், ஆம் ஆத்மி ராக்கி பிட்லான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுபாஷினி அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசுகையில்,

தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக உழைத்தவரும்  இந்திய தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரும் , நம்மால் கலைஞர் என அழைக்க கூடிய கருணாநிதி ஒரு பன்முக தன்மை கொண்ட தலைவர்.

ஒரு எழுத்தாளராக பத்திரிக்கையாளராக ஒரு முதல்வராக, ஒரு நிர்வாகியாக அவர் ஆற்றிய பணிகள் மகத்தான பணிகள் மாநிலம் ,மொழி, சாதி, மத நம்பிக்கை இவற்றிக்கெல்லாம் அப்பாற்பட்டு எல்லோரையும் சமத்துவமாக பார்க்கும் ஒரு அருமையான தத்துவத்தில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னுடைய வாழ்நாளின் போது அதிகமாக   பேசப்படாத பாலின சமத்துவத்தை அவர் சிந்தித்து அதற்காக போராடும்  போராளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் . இன்று அது தேசிய இயக்கமாக கொண்டாடப்படும் சூழல் உருவாகி உள்ளது.

நம்முடைய பெண்கள் இந்தியாவில் மகத்தான சாதனைகளை செய்துள்ளனர். பல தடைகளை மீறி சாதனை செய்துள்ளனர்.இன்று இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் ஒளிர்கிறார்கள். மக்களின் தலைவர்களாக பெண்கள் ஆற்றும் பணி மகத்தானது. நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் இன்னும் பல்வேறு தடைகளை தாண்ட வேண்டும். இருந்தாலும் நம்முடைய ஏழை எளிய சகோதரிகள் இன்னும் ஏராளமான தடைகளை தாண்டித்தான்  சமத்துவத்தை பெறும் சூழல் உருவாகி உள்ளது.

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்ஜில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த சட்டமானது பெண்களுக்கு சமுகத்தின் அடித்தளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, பெண்களுக்கு தலைமை பொறுப்புகளை வழங்கிய சட்டமாக அமைந்தது. நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டு இருக்கக்கூடிய சட்டம் நாம் எடுத்துக் கொண்ட முயற்சியும் கூட.

ஆனால் இந்த சட்டம் எப்பொது நடைமுறைப்படுத்தப்படும்? எப்போது அமல்படுத்தப்படும்? என்ற நிரந்தரமற்ற தன்மையிலே உருவாகியுள்ளது.

நாளை இந்தியா கூட்டணி வந்து தான் இந்த சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டிய சூழலை உருவாக்கும் என்பது திட்டவட்டமாக உள்ளது. அண்ணா அவரைத் தொடர்ந்து கலைஞர் தலைமையில் அமைந்த அரசு எடுத்து கொடுத்த முன்னெடுப்புகளும், செயல்படுத்திய திட்டங்களும் பெண்களுக்கான புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தியது. அதன் அடிப்படையில் தான் இந்தியாவே புகழ்ந்து கொண்டாடக்கூடிய மகளிர் சமத்துவத்தை கொண்டாட கூடிய ஒளி விளக்காக தமிழ்நாடு திகழ்கிறது என்று சொன்னால் மிகையல்ல.

தமிழ்நாட்டில் காவல் துறையில் இன்று நான்கில் ஒரு பங்கு பெண்கள் என்ற சூழ்நிலை உள்ளது. கலைஞர் செய்த சட்டத்திருத்தங்கள் முக்கியமானது என்னவென்று சொன்னால் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்தியது. அதன் விளைவாக அரசுப் பணிகளில் 30% பெண்களாக இருக்கிறார்கள். இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படுகின்ற அரசு 30 விழுக்காட்டை 40 விழுக்காடாக மாற்றி பெண்களை பெருமைப்படுத்தியுள்ளது. தாய், பால் குடிக்கும் குழந்தைகளுக்காகவும் செயல்படுத்தப்படும் திட்டத்தை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியதால் தான் இந்தியாவில் தமிழ்நாட்டில் மிகக் குறைந்த நிலையில் தாய் சேய் இறப்பு இருப்பதற்கு காரணம்.

கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசின் நடவடிக்கைகள் நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் கூடிய உரிமைகள், கடந்த 70 ஆண்டுகளில் செய்த நல்ல முயற்சிகளை எல்லாம் சீரழிக்கின்ற வகையில் செயல்படுவது மிகப்பெரிய பிரச்சனை.பெண்களை அடையாள சின்னமாக மாற்றி, மரபுகளை பின்பற்றி வருகிற பாரம்பரிய சுதந்தரம் என்பதாக நினைக்கிறது.

இந்த பெண்களுக்காக புதிதாக எதையும் உருவாக்க தயாராக இல்லை. சமத்துவத்திற்கும் அறம் சார்ந்த சமுதாயத்திற்கும், அனைத்து உரிமைகளையும் கடந்த 9 ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா கூட்டமைப்பு பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றியே தீரும். அனைவரும் சேர்ந்து போராடுவோம் நாம் அனைவரும் இணைந்து நிச்சயமாக இதனை சாதிப்போம் என்றார

இதையடுத்து மேடையில் பேசிய பிரியங்கா காந்தி,இந்தியாவில் பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும் அடக்குமுறைகளை சந்திக்க வேண்டி உள்ளது.

பல தலைமுறைகளாக நீடிக்கும் அடக்குமுறைகளிலிருந்து விடுபட பெண்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

நூறாண்டுகளுக்கு முன்பு பெண் ஏன் அடிமையானாள் என்று கேள்வி எழுப்பியவர் பெரியார்.

சமூக, பொருளாதார அடிப்படையில் பெண்கள் அடிமைப்பட்டதற்கு எதிராக ஏராளமான கட்டுரைகளை எழுதியவர் பெரியார்.

சமூகத்துக்கு அன்பையும் போராடும் குணத்தையும் கற்றுத் தந்தது பெண்களே.

பெரியாரின் கேள்விக்கு 100 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் நிலை அப்படியே உள்ளது.

பெரியார் வழியில் அண்ணா, கலைஞர் ஆகியோரும் பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்துள்ளனர்.

சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில் தான் உருவாகியது.

நாடு முழுமையான சமத்துவத்தை பெற இன்னும் நாம் உழைக்க வேண்டி உள்ளது.

மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அரசியலில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும். அடக்குமுறைக்கு எதிராக பெண்களின் சகிப்புத்தன்மையை புகழ்ந்து பேசுவதை நிறுத்த வேண்டும்.

மனித குலத்திற்கு பெண்கள் தான் ஆதாரம். பெண்கள் ஒன்று திரண்டால் அதற்கு நிகராக எந்த சக்தியும் இருக்க முடியாது.

மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி,

என்னுடைய குடும்ப சூழலை கருத்தில் கொண்டு நான் அரசியலுக்கு வந்ததாக சிலர் நினைக்கலாம். 

எந்த ஒரு பெண்ணும், மதம், சாதி, நிறம், சமூக பின்னணி ஆகியவற்றை கடந்து அரிசியலில் உரிய இடத்தை பெறுவது ஒரு பெரும் போராட்டம்தான், அதற்காக கடும் முயற்சிகள் மேற்கொண்டேன். 

பெண்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர், வரதட்சனை கொடுமை, வன்கொடுமை என பலவற்றை எதிர்கொள்கிறார்கள். 

கலைஞர் கருணாநிதி சமூகநீதிக்காகவும், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.  

அவரது வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செயல்படுகிறார். 

மகளிருக்கான கட்டணமில்லா பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை, கல்லுாரி மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை, பெண்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல ஏற்பாடு, தி.மு.க. அரசு திட்டங்கள் மகத்தானவை. பொதுப்போக்குவரத்தில் கட்டணமில்லா பயணித்தின் மகத்துவம் ஓர் பெண்ணாக எனக்கு தெரியும். 

மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டனர். நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. நாட்டில் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மத்திய பா.ஜ.க அரசில் பொருளாதாரம் சிதைந்து வருகிறது. வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. மத்திய அரசு, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் தோல்வியை சந்தித்துள்ளது. 

விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவது இல்லத்தரசிகள்தான். இதற்கு மோடி அரசே காரணம். 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான உரிமைகள் குறித்த ராஜீவ்காந்தி கனவு நினைவாகும். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்றார்.

விழாவில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே,

செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாரதியார் வரிகளை கூறி தமிழ் ஒரு இனிமையான மொழி என்றார்.

நாடாளுமன்றத்தில் என்னை சுற்றி திமுக எம்.பிகள் இருப்பார்கள்

எனக்கே  நான் திமுகவில் இருப்பது போல் தோன்றும்.

மகாராஸ்டிராவில் எனக்கு டிக்கெட் கிடைவில்லை என்றால், எனக்கு ஒரு டிக்கெட் தமிழ்நாட்டில் இருந்து திமுகவில் கிடைத்துவிடும்.

ஜாதி மத வேற்றுமைகள் இன்றி மொழி மீது பெற்றுக்கொண்டு தமிழ்நாடு உள்ளது பெருமையாக உள்ளது

மகளிர் இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்த போது, நாடாளுமன்றத்தில் பாஜகவின் 300 ஆண்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டின் பெண்களின் உரிமைகாக போராடி பேசினார்.

தமிழ் மொழிக்கும் மராத்திய மொழிக்கும் ஒற்றுமைகள் உண்டு

எனது தங்கை தமிழ்நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

அவர் தமிழ்நாட்டின் வழக்கம் படி தாலி அணிகிறார். இப்போது நாங்களும் தாலி அணிகிறோம்.

எனக்கு மல்லிக்கை பூ மிகவும் பிடிக்கும், சென்னை வரும் போதெல்லாம் இரண்டு கிலோ மல்லிக்கை பூ எனது தாய்க்கு வாங்கி வரச் சொல்வேன் என்றார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek