மாநிலம் சென்னை

காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சி எம்பிக்களுடன் அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்

by admin on | 2023-09-18 09:03:23

Share: | | |


காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சி எம்பிக்களுடன் அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்

(கோப்புப்படம் )

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் டெல்லி புறப்பட்டு சென்றார். 

காவிரி நதிநீர் பிரச்சினையில் நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு,பில்லிகுண்டுலுவில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மாதாந்திர நீர் அளவின் கால அட்டவணை வரைமுறை படுத்தப்பட்டது. அதன்படி 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 16.02.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பற்றாக்குறை ஆண்டில், அதற்கேற்ற விகிதாச்சார அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால்  இந்த ஆண்டில் 14.09.2023 வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. இது 65.1 டி.எம்.சி குறைவு ஆகும்.

இருந்தபோதிலும் தமிழக அரசு குறுவை பயிரிடுவதற்கும், சம்பா பயிர்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கும் ஏதுவாக, 12.06.2023 அன்று நீர் திறக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பங்கை, விகிதாச்சாரப்படி  விடுவிக்காததாலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி ஏற்படுத்தப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றால் இதற்குத் தீர்வு காண முடியாததாலும், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 14.08.2023 அன்று மனுவை ஒன்றை தாக்கல் செய்தது.  இம்மனு விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில், தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமற்றது என்றும், தமிழ்நாடு தனது ஆயக்கட்டை அதிகபடுத்தி உள்ளது என்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. 

மேலும், கர்நாடக அரசு  ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் 13.09.2023  எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், காவிரி டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடிநீர் இருக்கிறது எனவும் தவறான கருத்துக்களை தெரிவித்தது.

இந்த நிலையில்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு மத்திய ஜல்சக்தி மந்திரியிடம் மனு கொடுப்பார்கள் என்று முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் அமைச்சர் துரைமுருகன் காலை டெல்லி புறப்பட்டு சென்றார். 

டெல்லியில் ஜல்சக்தி துறை மந்திரி ஷெகாவத்தை சந்தித்து, தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் முழுமையாக கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விளக்கி மனு கொடுப்பதுடன், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்க உள்ளனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek