by puthiyavanadmin on | 2023-12-28 11:12:40
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்கிற கொள்கை அடிப்படையில் எளியவருக்கு அதிகம் உதவிகளைச் செய்து வந்தவர். தனது விடாமுயற்சியின் காரணமாக திரைத்துறையில் படிப்படியாக வளர்ச்சி கண்டவர். திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தமிழ்த் துறையில் வழங்கிய அற்புதமான கலைஞர்.
தமிழில் மட்டுமே 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் மிகச் சிறப்பாக பணி செய்தவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் காங்கிரஸின் மூத்த தலைவர் மூப்பனார் ஆகியோருடன் நெருங்கிய நட்பு பேணியவர்.
அரசியலில் தடம் பதித்து 2006ல் சட்டமன்ற உறுப்பினரானார். கட்சி ஆரம்பித்த ஆறு ஆண்டுகளில் 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக பெரும் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக ஏற்றம் பெற்றார். சக சட்டமன்ற உறுப்பினராக என்னுடன் அன்பாகப் பழகியவர்.
அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் துணிச்சலான பல முடிவுகளை முன்னெடுத்தவர். கேப்டன் என்று அனைத்து தரப்பினராலும் அன்பாகஅழைக்கப்பட்டவர். தமிழ் திரையுலகத்திற்கும் தமிழ்நாட்டின் அரசியல் களத்திற்கும் அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.
மனிதநேயமிக்க செயற்பாட்டாளர் திரு விஜயகாந்த் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek